உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒருநாள் கலெக்டர்.. மக்கள் மனுக்களை வரி விடாமல் படித்து தீர்வு காண உத்தரவிட்டதால் மகிழ்ச்சி

ஒருநாள் கலெக்டர்.. மக்கள் மனுக்களை வரி விடாமல் படித்து தீர்வு காண உத்தரவிட்டதால் மகிழ்ச்சி

திருப்பூர்: கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், உடுமலையில் நடந்த முதல்வர் பங்கேற்கும் விழாவுக்காக சென்றதால், நேற்று ஒருநாள் குறைகேட்பு கூட்டத்தில் ஒருநாள் 'கலெக்டராக' செயல்பட்டார் தனி துணை கலெக்டர் பக்தவத்சலம். மனுக்களை உதாசீனப்படுத்தாமல், வரிவிடாமல் படித்து, துறை சார்ந்தவர்களை அழைத்து, தீர்வு காணுமாறு அறிவுறுத்தியது, பொதுமக்களை ஈர்த்தது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளும் நேற்று உடுமலை சென்றுவிட்டனர். நேற்றைய குறைகேட்பு கூட்டத்தை, தனி துணை கலெக்டர் (சமூக திட்டம்) பக்தவத்சலம் நடத்தினார். வழக்கமாக கலெக்டர் தலைமையில் நடைபெறும்போது, மக்களிடமிருந்து மனுக்களை பெறும் அதிகாரிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்களை அழைத்து, 'இது என்னன்னு பாருங்க' என்றபடி, மனுவை கையில் கொடுத்து அனுப்பிவிடுவர். அலுவலர்களும், 'சரி சார் பார்த்துக்கொள்கிறோம்' என்றபடி, மனுவை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவர். தனி துணை கலெக்டர் பக்தவத்சலமோ, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் மக்கள் கொண்டுவந்த மனுக்களை வரிவிடாமல் படித்தார். மனுவின் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து, பிரச்னைகளை கூறி, 'விரைந்து தீர்வு காணவேண்டும்' என அறிவுறுத்தினார். தவறாக மனு எழுதிய நபருக்கு எச்சரிக்கை அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு கேட்டு, பெண் ஒருவர் மனு அளித்தார். மனுவை படித்த பக்தவத்சலம், 'அரசு திட்டங்களில் இலவசமாக வீடு வழங்குவதில்லை; வீடு ஒதுக்கீடு பெற, பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்,' என அப்பெண்ணுக்கு பதிலளித்தார். இலவசமாக வீடு வழங்க கோரி தவறாக மனு எழுதியவரை அழைத்து வர உத்தரவிட்டார். அலுவலக பணியாளர்கள் விரைந்து சென்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதியவரை, குறைகேட்பு கூட்ட அரங்கினுள் அழைத்து வந்தனர். அவரிடம், 'அரசு சார்பில் இலவசமாக வீடு வழங்கப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா? இதுபோன்று தவறாக மனு எழுதக்கூடாது. மக்களை தவறாக வழிநடத்தும்வகையில் மனு எழுதிக்கொடுத்தால், போலீசாரை கொண்டு மூலம், அப்புறப்படுத்த வேண்டிவரும்,' என, எச்சரித்து அனுப்பினார். பட்டா விவகாரத்தில் தீக்குளிக்க முயற்சி திருப்பூர், பி.என்., ரோடு, புகழும் பெருமாள் புரத்தை சேர்ந்த ஸ்ரீஅய்யப்பன், 45. குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த இவர், திடீரென மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். தடுத்து நிறுத்திய போலீசார், பாட்டிலை பறித்துவிட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அய்யப்பனை, தனி துணை கலெக்டரிடம் மனு அளிக்கச் செய்தனர். 'புகழும் பெருமாள் புரம் நான்காவது வீதியில் வசிக்கும் 63 குடும்பங்களுக்கு, கடந்த 2008ல், பட்டம் பாளையத்தில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை சமூகவிரோதிகள் சிலர் ஆக்கிரமித்தனர். எங்களால் குடியேற முடியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அரசு வழங்கிய பட்டா இடத்தை எங்களுக்கு பெற்றுத்தரவேண்டும்,' என்றார் அய்யப்பன். உடனடியாக பெருமாநல்லுார் ஆர்.ஐ.,யை போனில் அழைத்த தனி துணை கலெக்டர், பிரச்னையை விவரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என அறிவுறுத்தினார். அய்யப்பனிடம், 'உங்க பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன்; பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் பிரச்னைன்னா இப்படியா தற்கொலைக்கு முயற்சி செய்யுறது. உங்களுக்கு ஏதாவது ஆனால், யார் பதில் சொல்வது? உங்களுக்கு குடும்பம் இருக்குதானே. இனிமேல் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது' என, அறிவுரை கூறினார். சோதனையிடவில்லையா? போலீசுக்கு 'டோஸ்' அய்யப்பனிடம், மண்ணெண்ணெயை கொண்டுவந்தது தொடர்பாக பக்தவத்சலம் விசாரித்தார். மண்ணெண்ணெய் பாட்டிலை இடுப்பில் செருகிக்கொண்டு, கலெக்டர் அலுவலக பிரதான வாயில் வழியாக வந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டர்கள் இருவரை அழைத்தார் தனி துணை கலெக்டர். 'கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சாதாரணமாக மண்ணெண்ணெய் கேன் கொண்டுவந்துள்ளார். எந்ததெந்த வழிகளில் வருகிறார்களோ, அங்கெல்லாம் போலீசார் சோதனையிடவேண்டுமல்லவா? இவரை ஆய்வு செய்யாமல் எப்படி உள்ளே அனுப்பிவைத்தீர்கள். அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? பிரதான நுழைவாயிலில் ஆண் போலீசார் யாரும் பணியில் இல்லையா' என்று கேள்வி எழுப்பினார், தனி துணை கலெக்டர். போலீசார், சமாளிப்பு பதில் சொல்வே, 'இதெல்லாம் சரியான பதில் இல்லை. குறைகேட்பு கூட்ட நாளில், மாநகர ஆயுதப்படை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துங்கள்' என்றார், பக்தவத்சலம். மனு அளிக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும் என்கிற முனைப்போடு குறைகேட்பு கூட்டத்தை நடத்திய தனி துணை கலெக்டரை பார்த்து, பொதுமக்கள் மனதார வாழ்த்தினர். --- பெண் ஒருவருக்கு தவறாக மனு எழுதித் தந்தவரை வரவழைத்து எச்சரித்து அனுப்பிய தனி துணை கலெக்டர் (சமூக திட்டம்) பக்தவத்சலம். தீக்குளிக்க முயன்ற ஸ்ரீஅய்யப்பன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அலுவலர்களிடம் கேள்வி ஏற்கனவே மனு அளித்தும், தீர்வு கிடைக்காததால், சிலர் நேற்றைய கூட்டத்திலும் மனு அளித்தனர். துறை சார்ந்த அலுவலர்களை அழைத்த தனி துணை கலெக்டர் பக்தவத்சலம், 'மீண்டும் மீண்டும் ஒரே பிரச்னை தொடர்பாக மனு அளிக்கப்படுகிறது; ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மக்களின் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணவேண்டும். இல்லையென்றால், மனுதாரருக்கு உரிய பதில் கொடுங்கள்' என, கடிந்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhaskaran
ஆக 13, 2025 04:19

இம்மாதிரி மாவட்டத்துக்கு ஒருவர் அதிகாரமையத்தில் இருந்தாலே மக்கள் பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கும்


Gajageswari
ஆக 12, 2025 05:25

நமக்கு என்ன தேவை/பிரச்சினை எழுத கூடாது. அரசு அதிகாரிகளால் என்ன முடியுமோ அதை தான் எழுத வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை