''விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை, வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்...' என பாடினான் முண்டாசுக்கவி பாரதி. 'அடுப்படி தான் உலகம்' என்றிருந்த மாதர் சமூகம், விண்ணில் பறந்து, அண்ணாந்து பார்க்க வைக்கும் அளவுக்கு வளர்ச்சியில் உச்சம் கண்டுள்ளனர்.தலைமுறை மாற்றம் என்பது, கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாய் மாறியிருக்கிறது என்பது தான், இதற்கு முக்கிய காரணம். பெண் கல்வி, மேலோங்கியிருக்கிறது. 'ஆண்களுக்கு நிகராக பெண்கள்' என்ற நிலையை கடந்து, ஆண்களை காட்டிலும் பல துறைகளில் பெண்கள் கோலோச்சி வருகின்றனர் என்று சொல்வதில் மிகையில்லை. கல்வி, கலை, இலக்கியம், அரசியல், உற்பத்தி தொழில் என, பெண்கள் இல்லாத துறையே இல்லை, என்ற நிலை வந்திருக்கிறது.தங்கள் குடும்பத்தை, தனியொருவளாய் தாங்கிப்பிடிக்கும் ஆற்றலை பெண்கள் பெற்றிருக்கின்றனர். 'எந்தவொரு காரியத்தையும் செய்து முடித்தாக வேண்டும்' என்ற வைராக்கியம் உழைக்கும் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதை, பல இடங்களில் பார்க்க முடிகிறது.உழைக்கும் பெண்களிடம் உள்ள இந்த மன தைரியம், இன்று, நேற்றல்ல, கடந்த, நுாறாண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டது. கடந்த, 1908, மார்ச் 8ல், அமெரிக்காவில் ஆடை தொழிலில் ஈடுபட்டிருந்த உழைக்கும் பெண்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி பேரணி நடத்தினர்.'தங்களின், 16 மணி நேர பணி நேரத்தை குறைக்க வேண்டும்; கூலியை உயர்த்த வேண்டும்; பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முழங்கியடி, அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதிகளில் பேரணி நடத்தினர்.இந்த நாளை தான், தேசிய பெண்கள் தினமாக, அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அறிவித்தது.ஆக, பெண்களின் உழைப்பு என்பது, ஒரு வீட்டுக்குள் மட்டுமின்றி, மாவட்டம், மாநிலம், தேசம் கடந்து, உலகளவில் போற்றப்படக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.அதற்கேற்ப, இந்தாண்டின் மகளிர் தினத்தின் மைய கருத்தாக, 'பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்ற அறைகூவலை ஐ.நா., சபை முன்வைத்திருக்கிறது. அதாவது, சமுதாயத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும், பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரம் வழங்குதலின் முக்கியத்துவத்தை இந்த கருத்து வலியுறுத்துகிறது.- இன்று உலகபெண்கள் தினம்