திருப்பூர்;'தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானத்தில் முக்கிய காரணிகளாக விளங்கும் இளம் வாக்காளர்கள், தகுதியான வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், தலைமை வகித்து பேசியதாவது;வரும் தேர்தலில், நுாறு சதவீத ஓட்டளிப்பை உறுதிபடுத்த வேண்டும். ஓட்டளிப்பது நம் உரிமை, கடமை; இதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. எதிர்காலம் சிறப்பாக இருக்க, நல்ல ஆட்சியாளர்களிடம் நாடு இருக்க வேண்டும்.நாட்டுக்கு நன்மை செய்யும் வேட்பாளர்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஓட்டளிக்கும், ஓட்டு வங்கி வாக்காளர்கள், ஓட்டளிக்காத வாக்காளர்கள் தவிர, இளம் வாக்காளர்கள் தான், நடுநிலையுடன் சிந்தித்து தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் மனநிலையை பெற்றிருக்கின்றனர்.ஒரு வேட்பாளரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் உள்ளனர். இதை தங்களின் பெருமையாக கருதி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கி, தங்களின் ஓட்டுகளை விற்க கூடாது; இது, தன்மானத்தை அடகு வைக்கும் செயல். 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பின், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகை ஏந்திய படி, உறுதிமொழியேற்றனர். வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாணவ பிரதிநிதி சுந்தரம், முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.