பல்லடம் புறவழிச்சாலை: மறுபரிசீலனையில் திட்டம்
பல்லடம்: புறவழிச்சாலை திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதால், பல்லடத்தில், புறவழிச் சாலை திட்டம் அமைவது கேள்விக்குறியாகி உள்ளது. 'பல்லிடம்' என்ற பெயர் மருவி, பல்லடம் என்று ஆனது என்பர். இதற்கு ஏற்ப, கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள், பல்லடம் நகரப் பகுதியில் இணைகின்றன. எனவேதான், பல்லடம் நகர பகுதியில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், புறவழிச் சாலை திட்டம், மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்டவற்றை, பல்லடம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி, காளிவேலம்பட்டி பிரிவு - - மாதப்பூர் வரை, புறவழிச்சாலை அமைக்க கடந்த ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது, இதற்கிடையே, புறவழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதன்படி, பெரும்பாளி -- மாதப்பூர் வரை, புதிய புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் வந்தது. இதற்கான அளவீடு பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம், ஏராளமான விவசாய நிலங்கள், கிணறுகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பழைய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகள் பலர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல், பழைய திட்டத்தால் பாதிப்பு உள்ளதாக கூறி, மற்றொரு தரப்பினரும் கோரிக்கை மனு அளித்தனர். இருதரப்பு கோரிக்கை மனுவையும் பெற்றுக் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், இரு திட்டங்களின் வேறுபாடுகள், நிறை, குறைகள் கண்டறியப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், அமைச்சகத்தின் மூலம் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகே, புறவழிச்சாலை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 'விடியல்' எப்பொழுது? கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேறாத புறவழிச்சாலை திட்டம், இப்போதாவது நிறைவேறுமா என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், நடப்பு ஆண்டும், புறவழிச்சாலை அமைவது கேள்விக்குறியாக உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி, பல்லடத்துக்கு புறவழிச்சாலை திட்டம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.