உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., இரண்டாம் மண்டலம் மூன்றாம் சுற்றுக்கு... நீர் திறக்க திட்டம்! ரோந்தை தீவிரப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

பி.ஏ.பி., இரண்டாம் மண்டலம் மூன்றாம் சுற்றுக்கு... நீர் திறக்க திட்டம்! ரோந்தை தீவிரப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை: பி.ஏ.பி., இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு, வரும், 24ம் தேதி முதல் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றில் தண்ணீர் திருட்டைத்தடுக்க, கண்காணிப்பு குழு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திலுள்ள, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த ஆக., 18ல், தண்ணீர் திறக்கப்பட்டது.வரும் டிச., 16 வரை, 120 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, 4 சுற்றுக்களில், 8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தியாக இருந்ததால், முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக்களுக்கு, இடைவெளியில்லாமல், தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்ததால், இரண்டாம் சுற்றுக்கு, கடந்த, 15ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 52.74அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 452 கனஅடி நீர் வரத்து காணப்பட்டது. அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், உப்பாறு அணைக்கு, பிரதான கால்வாய் அரசூர் ஷட்டரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.உப்பாறு அணைக்கு, 5 நாட்கள் நீர் வழங்கியதும், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு, மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்ததால், இரண்டாம் சுற்று முடிந்ததும், இடைவெளி விட்டு, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், உப்பாறு அணைக்கு, பிரதான கால்வாயில், அரசூர் ஷட்டர் வாயிலாக, நீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வரும் 24ம் தேதி முதல், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்களுக்கு மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

ரோந்தை தீவிரப்படுத்தணும்!

மண்டல பாசன காலத்தில், பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களில் தண்ணீர் திருட்டு தொடர்கதையாகியுள்ளது. திருட்டை தடுக்க, அனைத்து துறைகளை உள்ளடக்கிய கண்காணிப்புக்குழுவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் துவக்கியது.இருப்பினும், இக்குழுவினர் செயல்பாடுகளில் தொடர்ந்து சுணக்கம் நீடித்து வருகிறது. சில இடங்களில், நீர் திருட்டு குறித்து விவசாயிகள் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பாசன காலத்தில் மழை பெய்யாவிட்டால், கடைமடை பகுதிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். எனவே, கண்காணிப்பு குழுவினர் ரோந்தை தீவிரப்படுத்தி, தண்ணீர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி