உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கூடாது பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு
திருப்பூர்: கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பி.ஏ.பி., திட்டக்குழு உறுப்பினர்கள் பேசுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில், கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க முயற்சிக்க கூடாது; முடிவை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தினர்.பதிலளித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் கேட்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எவ்வித முடிவும் செய்யவில்லை. பி.ஏ.பி., பாசன திட்டம், அமைப்பு ரீதியாக இயங்கி வருகிறது.உபரி தண்ணீர் கிடைத்தாலும், பி.ஏ.பி., நிர்வாக அமைப்புகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவெடுக்க முடியும். மற்றபடி, பி.ஏ.பி., திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடு இருக்காது. உபரிநீர் கிடைத்தால் மட்டுமே உப்பாறுக்கு தண்ணீர் வழங்க முடியும்; தற்போது, அதுதொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என்றார்.கலெக்டரின் அறிவிப்பை, கூட்டரங்கில் இருந்த விவசாயிகள், கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதன்பின், கோரிக்கையை மனுவாக கொடுத்து, கலைந்து சென்றனர்.