உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வன எல்லையில் செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் கோரிக்கை

வன எல்லையில் செயல்பாடின்றி முடங்கிய கிராம குழுக்கள்! அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் கோரிக்கை

உடுமலை : வன எல்லையில், மனித - வனவிலங்கு மோதலை தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட கிராம குழுக்கள் எவ்வித செயல்பாடும் இல்லாமல் முடங்கியுள்ளன. இதனால், நிவாரணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கதையாக உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் கடந்த 2008ல், சேர்க்கப்பட்டது. அப்போது, வன எல்லையிலுள்ள கிராம மக்கள் புலிகள் காப்பக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து, புலிகள் காப்பக விதிமுறைகள் குறித்து, வனத்துறை சார்பில் கிராமங்களில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில், புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று எனப்படும் வன எல்லை கிராமங்களின் மேம்பாட்டிற்கும், திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும்.ஒவ்வொரு கிராமத்திலும், வனத்துறை, மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய கிராமக்குழு அமைக்கப்படும். அக்குழுவிற்கு, புலிகள் காப்பக திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, அந்நிதியில், குழு சார்பில் திட்டமிடும் பணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.உடுமலை, அமராவதி வனச்சரக எல்லை கிராமங்களில், கிராமக்குழு துவங்கப்பட்டன. ஆனால், இக்குழுக்கள் இதுவரை முறையாக செயல்படாமல் முடங்கிய நிலையே உள்ளது.தற்போது மலையடிவார கிராமங்கள் மட்டுமல்லாது, அனைத்து கிராம விளைநிலங்களிலும், காட்டுப்பன்றிகளால், சாகுபடி பயிர்கள் சேதப்படுத்தப்படுகிறது.வன எல்லையிலுள்ள அகழி துார்வாரப்படாமல், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து, தண்ணீர் குழாய்களை உடைப்பதுடன், மா மற்றும் தென்னை போன்ற நீண்ட கால பயிர்களையும் சேதப்படுத்துகின்றன.இத்தகைய சேதங்களுக்கு வனத்துறையின் நிவாரணத்தை பெற, விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.கிராம குழுக்கள் செயல்பாட்டில் இருந்தால், பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், நிரந்தர தீர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள முடியும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆலோசனை கூட்டம்

இது குறித்து வன எல்லை கிராம மக்கள் கூறியதாவது: வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட, கிராம குழுக்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கியுள்ளன. மனித - வன விலங்குகள் மோதலை தவிர்ப்பதற்கான பல்வேறு பணிகளை கிராம குழுவிற்கு ஒதுக்கப்படும் நிதியில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம்.வனத்துறைக்கும், வன எல்லை கிராம மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய குழு முடங்கியுள்ளதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. விளைநிலங்களில், வனவிலங்குகள் ஏற்படுத்தும் சேதத்துக்கு நிவாரணம் பெறுவது முதல் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.முதற்கட்டமாக, வனத்துறை மற்றும் கிராம குழுக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கவும் இக்கூட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.விவசாயம் மட்டுமல்லாது வெளிச்சுற்றில், வனச்சூழலை பாதுகாக்கவும், கிராம குழுக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி