கிராம சபாவில் பங்கேற்பதா? பொதுமக்கள் டிஜிட்டல் சர்வே
திருப்பூர்: சமீப ஆண்டுகளாக, கிராம சபாவில் முக்கிய பிரச்னைகளை விவாதித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதற்காக கிராம மக்களை ஒன்றிணைத்து, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களின் உதவியுடன் குழுக்களை உருவாக்கிக் கொள்கின்றனர்; அதில் கருத்துக்கேட்பும் நடத்துகின்றனர். திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சி பகுதியில், பாறைக்குழியில் குப்பைக் கொட்டப்படும் பிரச்னை நிலவி வரும் நிலையில், மக்கள் குழுவாக இணைந்து, கிராம சபையில் பங்கேற்கலாமா; வேண்டாமா; கிராம சபாவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற மக்களின் மனநிலையை 'டிஜிட்டல் சர்வே' வாயிலாக அறிந்து, அதற்கேற்ப செயல்படுகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'கிராம சபாவில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை, குறைகளை தீர்க்க வேண்டியது அவசியமாக மாறியிருக்கிறது. ஆனால், அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு தான் இல்லை,' என்றனர்.