உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடம் பிடிக்கும் கட்சிகள்!

அடம் பிடிக்கும் கட்சிகள்!

திருப்பூர்,: அரசியல் கட்சியினர் முன்வராதநிலையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில், அந்தந்த அரசு துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.அரசு துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில் உள்ள, அரசியல் கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, கொடிக்கம்பங்களை, அரசியல் மற்றும் அமைப்பினர் சுயமாக அகற்றுவதற்கான கால அவகாசம், கடந்த ஏப். 21ம் தேதியுடன் முடிவடைந்தது.திருப்பூர் மாவட்டத்தில், தரையில் நடப்பட்ட 2,652 கொடிக்கம்பங்கள்; பீடத்துடன் கூடிய 645 கம்பங்கள் என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அரசியல் கட்சிகளின் கம்பங்கள் மட்டும், 2,859 உள்ளன; மத அமைப்புகளின் 234 கம்பங்கள்; சாதிய அமைப்புகளின் 57 கம்பங்கள்; இதர அமைப்புகளின் 147 கம்பங்கள் உள்ளன.மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மார்ச் மாதம், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரை அழைத்து, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.மின் கம்பங்களில் உரசும் வகையிலோ, வேறு சிக்கலான இடங்களில் உள்ள கம்பங்களை அகற்ற, மின்வாரியம் உள்பட அந்தந்த அரசு துறையினரின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அரசியல் கட்சியினரோ, கொடிக்கம்பங்களை அகற்றாமல் அலட்சியம் காட்டுகின்றனர். திருப்பூர் நகர பகுதியில், பெயரளவில் சில கம்பங்களை மட்டுமே அகற்றியுள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - கம்யூனிஸ்ட் என, அனைத்து அரசியல் கட்சியினரின் பொது இடங்களில் உள்ள கம்பங்களிலும், கொடி பறந்துகொண்டிருக்கிறது.கால அவகாசம் முடிந்ததையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு இதுதொடர்பாக, அந்தந்த அரசு துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, வருவாய்த்துறை உள்பட அந்தந்த அரசு துறை அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்த பொது இடங்களிலுள்ள கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ