உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பஸ் ஸ்டாண்டில் பரிதவிக்கும் மக்கள்; வசதிகள் சுத்தமாக இல்லை

 பஸ் ஸ்டாண்டில் பரிதவிக்கும் மக்கள்; வசதிகள் சுத்தமாக இல்லை

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டு, 1996ல் கூடுதல் ரேக் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், எவ்வித மேம்பாடும் செய்யப்படாமல், பஸ் ஸ்டாண்டுக்கு வரும் மக்கள் தொடர்ந்து பாதித்து வருகின்றனர். குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ரோடு, குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிய ரோட்டில் மக்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். வளாகத்திலுள்ள சில கடைகளில் இருந்து கழிவு நீர் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியேற்றப்படுகிறது. மூணாறு வழித்தட பஸ்கள் நிற்கும் பகுதியில், சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது. குடிநீரும் இல்லை பஸ் ஸ்டாண்டில் மக்கள் தேவைக்காக, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டது. அவை பயன்பாட்டில் இல்லை. ரூ.10க்கு அரசால், குடிநீர் பாட்டில் விற்கும் திட்டம் செயல்பாட்டில் இல்லை. இதனால், தொலைதுார கிராமங்களுக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். காட்சிப்பொருளாக உள்ள சுத்திகரிப்பு கருவியை பழுது பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இருக்கை எங்கே? ஆனைமலை, செஞ்சேரிமலை உள்ளிட்ட வழித்தட பஸ்கள் நிற்கும் பகுதியில், மக்களுக்கு போதிய இருக்கை வசதி இல்லை. வளாக கடைகளுக்கும், பஸ்கள் நிற்குமிடத்துக்கும் இடையில், நெருக்கடியடித்து நிற்க வேண்டிய நிலை மக்களுக்கு உள்ளது. அதிலும் சில கடைக்காரர்கள், தங்கள் பொருட்களை வைத்து கொள்வதால், நிற்பதற்கும், நடந்து செல்வதற்கும் இடமில்லாமல் பாதிக்கின்றனர். மழைக்காலங்களில் நனைந்தபடியே பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பூட்டியே கிடக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில், போதிய கழிப்பிட வசதியில்லை. ஆண்கள் கழிப்பிடம் நோய் பரப்பும் பகுதியாக உள்ளது. போதிய கழிப்பிடங்கள் இல்லாததால், பெண்களும், குழந்தைகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். உடுமலையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய வழித்தட பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தே செல்கின்றன. அதிகளவு மக்களும் இந்த ஸ்டாண்டையே பயன்படுத்துகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்தினர், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது, பஸ் ஸ்டாண்டில் ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ