உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தளி ரோட்டில் நிரந்தர நெரிசல்; தீர்வு இல்லாமல் தவிப்பு

தளி ரோட்டில் நிரந்தர நெரிசல்; தீர்வு இல்லாமல் தவிப்பு

உடுமலை; தளி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஒரு வழிப்பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள், உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி அணை, கேரளா மாநிலம் மறையூர், மூணாறு போன்ற பகுதிகளுக்கு, தளி ரோடு வழியாகவே செல்ல வேண்டும். இந்த ரோட்டில், நகரப்பகுதியில், தாலுகா, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், அரசுப்பள்ளிகளும் அமைந்துள்ளன. ரோட்டின் இருபக்கமும், நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து, காலை, மாலை நேரங்களில் நெரிசல் நிரந்தரமாகியுள்ளது. முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில், இரு சக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதிக்கு வரும் வாகனங்களை நிறுத்த குட்டைத்திடலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விதிகளை மீறி வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதால் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் தளி ரோடு நெரிசலில் சிக்கி கொள்கின்றன. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கு முன், தளி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, அனைத்து துறை ஆலோசனை கூட்டத்தை நடத்தி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை