திருப்பூரின் வளம் குன்றா உற்பத்தி நிலை பிற மாநிலங்களிலும் செயல்படுத்த திட்டம்
திருப்பூர்; திருப்பூரின் வளம் குன்றா உற்பத்தி நிலை குறித்து இந்திய ஆடை உற்பத்தி கேந்திரங்களுக்கு கற்றுத்தர தயாராக உள்ளதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் 11 வகையான வளர்ச்சி கவுன்சில்கள் சார்பில், 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சி, புதுடில்லியில், 14ம் தேதி துவங்கியது. தொழில்சார்ந்த தொழில்நுட்ப பகிர்வுக்காக, 100க்கும் அதிகமான, கருத்தரங்கு மற்றும் கலந்தாய்வு கூட்டங்களும் நடந்து வருகிறது. 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை, இந்திய ஜவுளித்துறை எவ்வாறு எதிர்கொள்கிறது' என்ற தலைப்பில், குழு கலந்துரையாடல் நடந்தது.மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, இலங்கை அரசின் தொழில்துறை மற்றும் தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் சுனில் தலைமை வகித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், திருப்பூரில் இயங்கி வரும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி குறித்து பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''கலந்தாய்வின் போது, தொழில் வளர்ச்சி நிலையை அறிய, விரைவில் திருப்பூர் வருவோம். இந்திய ஆடை உற்பத்தி கேந்திரங்களுக்கு, வளம் குன்றா உற்பத்தி நிலை குறித்து கற்றுத்தர தயாராக இருக்கிறோம். சிறப்பான செயல்பாடுகளை கற்றுணர்ந்து, மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா உறுதி அளித்துள்ளார்,'' என்றார். **'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி கலந்தாய்வுக்கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், இலங்கை அரசின் தொழில்துறை அமைச்சர் சுனில், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா.
'திருப்பூரின் சாதனைகள் சென்றடைய வேண்டும்'
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையான நாடு; இன்று ஐ.நா., சபை உலக நாடுகளை, 17 வகையான சூழலியல் மற்றும் சமூக கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமென, வலியுறுத்தி வருகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு ஏற்கனவே காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு உற்பத்தி தேசங்களுக்கு கடும் விதிமுறைகளை விதித்துள்ளது. திருப்பூர், வளம்குன்றா உற்பத்தி கோட்பாடுகளை கடைபிடித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கும் வகையில், 17 கோட்பாடுகளையும், திருப்பூர் பின்பற்றி வருகிறது; உலக அளவில், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை, திருப்பூர் பின்பற்றி வருகிறது. சமூக மேம்பாட்டிற்காக நாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் முக்கியமானவை. பள்ளி கல்வியை முடித்த மாணவர்கள் கல்லுாரியில் சேரும் விகிதம், இந்திய அளவில் 28.4 சதவீதம்; தமிழகத்தில், 51.8 சதவீதம்; திருப்பூர் மாவட்டத்தில், 97.4 சதவீதமாக இருக்கிறது. தொழில் துறையின் சமூக பங்களிப்பால், மாணவர் உயர்கல்வி தொடர்வது அதிகரித்துள்ளது. திருப்பூரின், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி சாதனைகள், வளர்ந்த நாடுகளுக்கு சென்றடைய, மத்திய அரசு உதவ வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளோம்.