குறைந்த தண்ணீரில் செடி அவரை
உடுமலை : குறைந்த தண்ணீர் தேவையுள்ள செடி அவரையை, கோடை காலத்தில் உடுமலை பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.உடுமலை எலையமுத்துார், பாலப்பம்பட்டி, மலையாண்டிகவுண்டனுார், சின்னவீரம்பட்டி பகுதிகளில், கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரை ஆதாரமாக கொண்டு, தோட்டக்கலை பயிர் சாகுபடியில், அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கொத்தவரை, செடி அவரை உள்ளிட்ட சாகுபடியை மேற்கொள்கின்றனர். அவ்வகையில், செடி அவரை கணிசமாக நடப்பு சீசனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'நடவில் இருந்து, 50 நாட்களுக்கு பிறகு, செடி அவரை அறுவடைக்கு வர துவங்குகிறது. தொடர்ந்து நான்கு மாதம் வரை, காய் பறிக்கலாம். உழவர் சந்தை மற்றும் உள்ளூர் சந்தைகளில், எளிதாக விற்பனை செய்யலாம். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறலாம்,' என்றனர்.