உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் கழிவுகளால் பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு 

பிளாஸ்டிக் கழிவுகளால் பி.ஏ.பி., வாய்க்காலில் அடைப்பு 

பல்லடம்;துளியும் பொறுப்பில்லாமல், பிளாஸ்டிக், குப்பை கழிவுகளை பி.ஏ.பி. வாய்க்காலில் வீசியெறிவதால், கரைகளில் கழிவுகளை கொட்டுவதால், பாய்ந்தோட வழியில்லாமல் ஷட்டர் உள்ள இடங்களில் தண்ணீர் தேக்கமாகிறது.பல்லடம் நகர், சுற்றுவட்டாரத்தில், 15 கி.மீ., துாரம் வரை பி.ஏ.பி. வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால் செல்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இன்னமும் சில இடங்களில் உள்ள விளை நிலங்களுக்கு, வாய்க்கால் நீர் தான் ஆதாரமாக உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லாத பிரச்னை பல பகுதிகளில் தொடரும் நிலையில், பல்லடத்தில் சீரான பாசனத்துக்கு பிளாஸ்டிக், குப்பை கழிவுகள் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. அவ்வகையில், பல்லடம், கவுண்டம்பாளையம் - மகாலட்சுமி நகர் - ராயர்பாளையம் - பொங்கேகவுண்டன்புதுார் வழியில் பி.ஏ.பி., கிளை வாய்க்கால் பாய்கிறது. மூன்று அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் இந்த கால்வாய் ஷட்டர், தண்ணீர் பாய்ந்து செல்ல ஏதுவாக ஷட்டர் உள்ள இடங்களில், ஓரடியாக மாறுகிறது. வாய்க்காலில் பலரும் குப்பை, பிளாஸ்டிக் கழிவு, வீடு மற்றும் நிறுவன கழிவுகளை வீசியெறிந்ததன் விளைவு ஷட்டரை விரைவாக பாசன நீர் கடந்து செல்ல வழியில்லாத அளவு கழிவுகள் மிதக்கிறது. ஷட்டர் அருகே பிளாஸ்டிக் பாட்டில், தெர்மாகோல் கழிவு சகிதமாக காணப்படுகிறது. --- பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி அடைத்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள். இடம்: பொங்கேகவுண்டன்புதுார். குப்பைக்கிடங்கானது வாய்க்காலில் குப்பையை வீசக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். தண்ணீர் பாயாத நாட்களில் வாய்க்காலை குப்பைக்கிடங்காக மாற்றி விடுகின்றனர். தண்ணீர் வரும் முன் குப்பை அள்ளுவதில்லை. இதனால், தண்ணீர் வரும் போதும் வாய்க்காலில் அனைத்தும் அப்படியே அடித்து வருகிறது. ஷட்டர் அருகே தேங்கும் கழிவு, ஷட்டரில் சிக்கி விட்டால், மொத்த தண்ணீரும் வெளியேறி விடும். தண்ணீரில் கண்ணாடி பாட்டில்கள் வீசியெறிகின்றனர். இது தெரியாமல், வாய்க்காலில் குளிப்பவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுகிறது. விளை நிலத்துக்கு வரும் தண்ணீர் சில நேரங்களில் துர்நாற்றமே அடிக்கிறது. ஒவ்வொருவரும் மாறினால் தான் வாய்க்கால் சுத்தமாகும். - பொங்கேகவுண்டன்புதுார் பகுதி விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ