பிளீஸ்... மனைவியுடன் சேர்த்து வையுங்க! டார்ச்சர் செய்த போதை ஆசாமிக்கு காப்பு
திருப்பூர் : குடும்ப தகராறில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்குமாறு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த டெய்லரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன், 39. அவர் மனைவி விமலா, 38. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். சரவணன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக ் வேலை செய்து வருகிறார். நொச்சிபாளையம், அபிராமிநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த சில மாதங்களாக சரவணன் வேலைக்குச் செல்லாமலும், மது போதையில் வீட்டில் தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்தது. இது குறித்து அவரின் மனைவி விமலா புகார் செய்வதும், போலீசார் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்புவதும் பல முறை நடந்துள்ளது. இதற்கிடையில், கடந்த இரு மாதம் முன், சரவணனின் தொல்லை தாளாமல் மகள்களுடன் சொந்த ஊருக்கு விமலா சென்று விட்டார்.இதனால், விரக்தியில் இருந்த சரவணன், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி பேசியுள்ளார்.தினமும் இதை ஒரு வேலை என்பது போல் சரவணன் தொடர்ந்து போலீசாரை 'டார்ச்சர்' செய்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் இது தொடர்பாக அவர் போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.ஒரு கட்டம் வரை பொறுமையாகப் பேசிய போலீசார், அவர் தொடர்ந்து கடுமையாக வாக்குவாதம் செய்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணனை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.