பி.என்., ரோட்டில் டிராபிக் சிக்னல் அமைப்பு
திருப்பூர் : பி.என்., ரோடு பிச்சம்பாளையம் பிரிவில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, சிக்னல் அமைக்கப்படுகிறது.திருப்பூர் நகரின் பிரதான ரோடுகள் மட்டுமின்றி, பெரும்பாலான வீதிகள் மற்றும் ரோடுகளில் வாகனப் போக்குவரத்து கடும் நெருக்கடியுடன் காணப் படுகிறது.தற்போது பிரதான ரோடுகளில் உள்ள முக்கிய ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் அமைத்தும், போக்குவரத்து போலீசார் பணியமர்த்தியும், இப்பிரச்னைக்கு சற்று தீர்வு ஏற்பட்டுள்ளது.மேலும், போக்குவரத்து நெருக்கடி நிலவும் பகுதிகள், டிராபிக் சிக்னல் இல்லாத பகுதிகளில் அமைப்பது குறித்தும் மாநகர போலீசார் ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்ெகாண்டு வருகின்றனர். அவ்வகையில், மையத்தடுப்பு அமைத்தல், வேகத் தடை அமைத்தல், ஒரு வழிப்பாதை, நோ பார்க்கிங் பகுதிகள், நோ சிக்னல் போன்ற நடவடிக்கைகள் குறித்து சோதனை அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு கட்டமாக, பி.என்., ரோடு பிச்சம்பாளையம பிரிவில் டிராபிக் சிக்னல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பி.என்., ரோட்டில் முக்கியமான இடமாக பிச்சம்பாளையம் நால் ரோடு அமைந்துள்ளது. எந்நேரமும் அதிகளவிலான மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்தும், நாலாப் புறங்களிலும் காணப்படும் இப்பகுதியில், வாகன நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த பகுதியில் டிராபிக் சிக்னல் அமைப்பதன் மூலம் இங்கு நிலவும் போக்குவரத்து அவதிக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.