ஓட்டுச்சாவடி மறுவரையறை; அனைத்து கட்சியினர் ஆலோசனை
திருப்பூர்; தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகள் மறுவரையறை செய்வது குறித்து அனைத்து கட்சியினருடன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதியில், 245 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஏறத்தாழ, 2.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடிகளை மறுவரையறை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ராஜசேகர், தேர்தல் பிரிவு அலுவலர் மேகநாதன் முன்னிலை வகித்தனர். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓட்டுச் சாவடி மறுசீரமைப்பு செய்வதில், 1,200 வாக்காளர்களுக்கும் மேல் உள்ள, 44 ஓட்டுச் சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஓட்டுச் சாவடிகளில் உள்ள வாக்காளர்களை பிரித்து கூடுதல் ஓட்டுச் சாவடிகள் ஏற்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. புதிய ஓட்டுச் சாவடிகளுக்கான ஓட்டுச் சாவடி மையங்கள் மாற்றம்; பாகம் பிரித்து கூடுதல் பாகம் உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மூன்று நாள் கால அவகாசத்தில் அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அதனடிப்படையில் மறு பரிசீலனை செய்து, அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.