| ADDED : டிச 27, 2025 06:30 AM
திருப்பூர்: தபால் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது: ஈ.கே.ஒய்.சி. (மின்னணு அடையாள உறுதிப்படுத்தல்): காகித பயன்பாட்டை குறைக்கும் விதம் தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கை ஈ.கே.ஒய்.சி. முறையில் தொடங்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு மூலம் எளிதாக சேமிப்பு கணக்கு தொடங்கலாம், பணபரிவர்த்தனையும் செய்யலாம். இணைய, மொபைல் வங்கி சேவை: கணக்கு இருப்பு, பரிவர்த்தனை விவரங்கள், நிதி பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் கைபேசி வாயிலாக வங்கி சேவைகளை பெறலாம். ஆதார் இணைப்பு: தபால் கணக்குடன் ஆதார் எண் இணைப்பதால் அரசு நலத்திட்ட தொகைகள் நேரடியாக நமது கணக்கில் செலுத்தப்படும், பரிவர்த்தனைகளில் பாதுகாப்பும் அதிகரிக்கிறது. இதுவரை ஆதார், மொபைல் எண் இணைக்காதவர்கள், அருகிலுள்ள தபால் நிலையம் சென்று உடனே இணைக்க வேண்டும். ஏ.டி.எம். சேவைகள்: அனைத்து தபால் நிலையத்திலும் வாடிக்கையாளர் பெயர் அச்சிடப்பட்ட தனிப்பயன் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகின்றன. தபால் நிலையம், வங்கி ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுப்பு, இருப்புத்தொகை அறிதல், மினி ஸ்டேட்மென்ட், பின் எண் மாற்றம் போன்ற சேவைகள் உள்ளன. தலைமை தபால் நிலையத்தில் எல்லா நேரங்களிலும் ஏ.டி.எம். வசதி உள்ளது. இரவிலும் இயக்கம்: திருப்பூர் மற்றும் தாராபுரம் தலைமை தபால் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்ட அலுவலக நேரம் பயன்பாட்டில் இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகியும், www.indiapost.gov.inஎன்ற இணையதளத்திலும் தகவல் பெறலாம்.