உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3வது நாளாக பவர்டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக்

3வது நாளாக பவர்டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக்

திருப்பூர்: ஒப்பந்த கூலி வழங்காத பிரச்னைக்கு, 'சைமா' சங்கம் தலையிட்டு, சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டுமென, பவர் டேபிள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் 'சைமா' மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் இடையே, கட்டண உயர்வு வழங்கும் ஒப்பந்தம், 2022ல் ஏற்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம், நடைமுறை கட்டணத்தில் இருந்து, 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தி வழங்கும் நிலையில், பெரிய நிறுவனங்கள் சில கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. இதனால், 1,500க்கும் அதிகமான 'பவர்டேபிள்' யூனிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒப்பந்தம் செய்தபடி கட்டண உயர்வு வழங்கும் வரை, நுாதன போராட்டம் நடக்குமென, பவர் டேபிள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஒப்பந்த கூலியை வழங்கும் வரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் 'டெலிவரி எடுக்க மாட்டோம்; டெலிவரி கொடுக்கவும் மாட்டோம்' என்று அறிவித்துள்ளனர். அதன்படி, புதிதாக 'கட்டு' எடுக்க மாட்டோம்; கைவசம் உள்ள துணியை மட்டுமே தைப்போம்; தைத்து முடித்த உள்ளாடைகளை 'டெலிவரி' கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கி வரும், 1,000க்கும் அதிகமான யூனிட்டுகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. கடந்த 7ம் தேதி துவங்கி போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை துவங்க உள்ள நிலையில், ஒப்பந்த கூலி தடையின்றி கிடைக்க, 'சைமா' தலையிட்டு சுமூக தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் பவர்டேபிள் சங்க பொதுசெயலாளர் முருகேசன் கூறுகையில், ''மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது; வெட்டிய துணி இல்லாத யூனிட்டுகளில் உற்பத்தி நடக்கவில்லை. எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள 'சைமா' தலையிட்டு, 7 சதவீத ஒப்பந்த கூலி உயர்வை பெற்றுத்தந்து, சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ