மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவில் சிக்கல்
திருப்பூர்; இணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் பலர், செல்லுபடியாகாத பழைய வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவருவதால், உங்களுடன் ஸ்டாலின் முகாமில், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மற்ற விண்ணப்ப பதிவுகளைவிட, உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து உரிமைத்தொகை கிடைக்காதோர், விதிமுறை தளர்வு காரணமாக தகுதியான பெண்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று, உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துவருகின்றனர். முகாமில், பெண்களிடமிருந்து ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு மற்றும் இதர விவரங்கள் பெறப்பட்டு, மொபைல் ஆப் வாயிலாக, உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. சில பெண்கள், முகாமுக்கு, சரியான வங்கி கணக்கு விவரங்களை கொண்டுவருவதில்லை. அதனால், உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பழைய வங்கி கணக்கு பதிவு செய்வதில் பிணக்கு வருவாய்த்துறையினர் கூறியதாவது: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், மகளிர் உரிமைத்தொகை பதிவுக்கு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அறியாமை காரணமாக, சில பெண்கள் ஐ.எப்.எஸ்.சி., கோடு இல்லாத கூட்டுறவு வங்கி கணக்கு புத்தகங்களை கொண்டுவருகின்றனர். சில வங்கிகள், வேறு வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்களுக்கு புதிய கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடுடன் கூடிய பாஸ் புக் வழங்கப்படுகிறது. ஆனால், முகாமுக்கு வரும் பெண்களில் சிலர், பழைய வங்கி கணக்கு புத்தக நகலையே எடுத்துவருகின்றனர். இக்காரணங்களால், உரிமைத்தொகை விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சரியான ஆவணங்களை எடுத்துவருமாறு, திருப்பி அனுப்பவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், முகாமுக்கு வரும் பெண்களுக்கும், பதிவு செய்யும் அலுவலர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. முகாமில், வரிசையில் காத்திருந்து, விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாததாலும், மீண்டும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வரவேண்டியுள்ளதால், வீண் அலைச்சலுக்கு உள்ளாக நேரிடுகிறது. உரிமைத்தொகை பதிவுக்கு வரும் பெண்கள், ஆதார், ரேஷன் கார்டு மற்றும் கட்டாயம் ஐ.எப்.எஸ்.சி., கோடுடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம், இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எனில், புதிய வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., கோடுடன் கூடிய புத்தகத்தை எடுத்துவரவேண்டும். இதன்மூலம், வீண் அலைச்சலை தவிர்க்கலாம்.