4 ஆண்டில் 35,552 டன் கொப்பரை கொள்முதல்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில் 35 ஆயிரத்து 552 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், உழவர் சந்தைகள் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில், 770 கோடி ரூபாய் மதிப்பிலான, 2 லட்சத்து 40 ஆயிரத்து 53 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 708 விவசாயிகள் மூலம் 16 ஆயிரத்து 32 நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அமைக்கப்பட்ட நான்கு உலர்களம் மற்றும் உலர் களத்துடன் கூடிய சேமிப்பு கிடங்குகளால், 470 பேர் பயனடைந்துவருகின்றனர். வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்வகையில், 287 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம், 3 சதவீத வட்டி மானியத்துடன், 147 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, வணிக செயல்பாடுகளை மேம்படுத்த 8.02 லட்சம் ரூபாய் மானியம், தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தில், பயனாளிகள் மூன்று பேருக்கு, முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்க, 56.25 லட்சம் ரூபாய் மானியம் ஆகியன வழங்கப்பட்டுள்ளது. விலை ஆதரவு திட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, 35 ஆயிரத்து 552 டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பொருளீட்டு கடனாக, 33.72 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 993 விவசாயிகள், 1.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 91 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.