உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்முன் தெரிந்தும் கைக்கெட்டாத லாபம்! செங்காந்தள் மலர் விவசாயிகள் வாட்டம்

கண்முன் தெரிந்தும் கைக்கெட்டாத லாபம்! செங்காந்தள் மலர் விவசாயிகள் வாட்டம்

மருத்துவ குணம் நிறைந்த செங்காந்தள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், கைக்கெட்டும் லாபம் கண்முன் தெரிந்தும், வாய்க்கு எட்டாத நிலையில் தவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், புதுப்பை, மூலனுார், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், தோட்டக்கலை பயிரான செங்காந்தள் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், 2,000 முதல், 3,000 ஏக்கர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.கரூர் அரவக்குறிச்சி, திண்டுக்கல் மார்க்கம்பட்டி, ஒட்டன்சத்திரம், அரியலுார், ஜெயங்கொண்டம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வணிக ரீதியாக இவை சாகுபடி செய்யப்படுகின்றன. மாநிலம் முழுக்க சுமார், 7,500 ஏக்கர் பரப் பளவில் செங்காந்தள் விதை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.பொதுவாக, செங்காந்தள் கிழங்குகள் மே முதல், ஆக., வரை முளைக்கும். அக்., முதல் நவ., வரை பூக்கள் பூத்து காய்க்கும். மழைக்காலம் துவங்கும் முன், அதாவது ஜூன், ஜூலையில் விதைப்பு செய்ய வேண்டும். செங்காந்தள் விதை, கேன்சர் நோய்க்கு தடுப்பு மருந்துக்கான மூலப் பொருளாக பயன்படுகிறது என்பதால், விவசாயிகளுக்கு இது ஒரு பணப்பயிர் என்று சொல் வதில் மிகையில்லை.'உற்பத்தி செய்த விதைக்கு, கிலோவுக்கு, 3,000 ரூபாய்க்கும் மேல் விலை கிடைத்தால் மட்டுமே கட்டுபடியாகும்' எனக்கூறும் விவசாயிகள், இடைத்த ரகர்களின் பிடியில் சிக்கியிருப்பதால், உரிய விலை கிடைப்பதில்லை' என ஆதங்கப்படுகின்றனர்.சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள தெரியாத விவசாயிகளின் இயலாமை, அறியாமையை பயன்படுத்தி, அவர்களுக்கு சாகுபடி செலவுக்கு முன்பணமாக சில லட்சம் ரூபாய்களை வழங்கி விடுகின்றனர், இடைத்தரகர்கள்.பின், மிகக்குறைந்த விலையை விவசாயிகளுக்கு வழங்கி, விதையை வாங்கி செல்கின்றனர் என்பது, விவசாயிகளின் ஆதங்கம்.எனவே, செங்காந்தள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனை, அரசு உதவிகள், சந்தை வாய்ப்பு உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தோட்டக்கலைத்துறையினர் வழங்கினால், தங்கள் வாழ்வு செழிக்கும் என்பதே, விவசாயிகளின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை