சொத்து வரி உயர்வு ரத்து; வியாபாரிகள் வேண்டுகோள்
திருப்பூர்:மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள், நேற்று மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோரிடம் அளித்த மனு விவரம்:தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டாக வீட்டு வரி உயர்த்தப்படவில்லை. கடந்த, 2022ல் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில், 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முந்தைய கட்டடங்களுக்கு இது சரியாக இருந்தாலும், 2020ம் ஆண்டுக்குப் பின் கட்டிய கட்டடங்களுக்கு இந்த வரி உயர்வு மிகவும் அதிகம். மேலும் தற்போது 6 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியை ஒப்பிடுகையில் இங்கு வரி விதிப்பு மிகவும் அதிகம். ஒரே வீதியில் வரி விதிப்புகளில் முரண்பாடு உள்ளது. இதை குறைத்து அறிவிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட 6 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.இதுவரை மாநகராட்சியில் கடைகளுக்கு குப்பை வரியாக 600 முதல் 1,200 ரூபாய் விதிக்கப்பட்டது. தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. இதனால் கடைகளில் அவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே குப்பை பெறுகின்றனர். இதனால் குளறுபடி நிலவுகிறது. மாநகராட்சி நிர்வாகமே குப்பையை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.