திறந்தவெளி பாராக மாறும் சாலை கிராமங்களில் பொதுமக்கள் கவலை
பொங்கலுார்; பொது இடத்தில் மது அருந்திய நபர்களை தட்டி கேட்டதால் பல்லடம் கள்ளக்கிணர் அருகே நான்கு பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொங்கலுார் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.தொடர்ந்து குற்றங்கள் அதிகரிக்க பொதுவெளியில் மது அருந்துவதும் முக்கிய காரணம். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கிராம பொதுமக்கள் கூறுகையில், 'பலர் மது அருந்துவது போல ரோட்டோரத்தில், பொது இடங்களில் மணிக்கணக்காக அமர்ந்து இருக்கின்றனர். அவர்களை தட்டி கேட்டால் கொலை செய்யவும் தயங்குவதில்லை.இதனால், அருகில் செல்லவே பலரும் பயப்படும் நிலை உள்ளது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் அருகில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடவும், கொலை செய்யவும் முயற்சிப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. பொது இடங்களில் மது அருந்துவோரை கைது செய்வோம் என, பல்லடம் டி.எஸ்.பி., கூறியுள்ளார்.அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறையும்,' என்றனர்.