மேலும் செய்திகள்
தீர்வுகளை தேடி குறைகளை கொட்டித் தீர்த்த மக்கள்!
18-Mar-2025
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், குடிநீர் பிரச்னை காரணமாக, பொதுமக்கள், காலி குடங்களுடன் ரோட்டுக்கு வர தயாராகி வரும் நிலையில், உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுத்துள்ளது.பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்டவை பிரதான தொழில்களாக உள்ளன. அத்திக்கடவு மற்றும் பில்லுார் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும், தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கும் நோக்கில், சில ஊராட்சிகளுக்கு மட்டும், மேட்டுப்பாளையம் திட்ட குடிநீரும் வினியோகமாகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும் துவங்கிவிட்டது.கடந்த காலங்களில், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, வாரம் ஒரு முறை என, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த பகுதிகளில், தற்போது, 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதவிர, குடிநீர் பற்றாக்குறையை போக்க கொண்டு வந்த மேட்டுப்பாளையம் குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோடை காலத்தில், வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக குடிநீர் தேவை ஏற்படுகிறது.இச்சூழலில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதால், பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால், அவர்களது குடும்ப வருவாய் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள், ரோட்டுக்கு வந்து போராட தயாராகி வருகின்றனர். பொதுமக்கள், காலி குடங்களுடன் ரோட்டுக்கு வரும் முன், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.ஊராட்சிகளில், முறைகேடாக வினியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதுடன், குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
18-Mar-2025