மண்டல பாசனத்துக்கு தயாராகும் கால்வாய்கள் பொதுப்பணித்துறை தீவிரம்
உடுமலை : மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள பூலாங்கிணறு கிளை கால்வாயில், புதர்களை அகற்றும் பணி, பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசனம், ஐந்தாவது சுற்றுக்கு, அணையிலிருந்து பிரதான கால்வாயில், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இரண்டாம் மண்டல பாசனம், வரும், 6ம் தேதி நிறைவு பெறுகிறது. மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 29ல், தண்ணீர் திறக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.இதையடுத்து, மூன்றாம் மண்டல பாசன பகுதிகளில், பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இந்த மண்டல பாசனத்தில், பூலாங்கிணறு கிளை கால்வாயில், 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தண்ணீர் திறக்கப்படுவதால், கிளைக்கால்வாய், புதர் மண்டி பரிதாப நிலையில் உள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக, புதர்களை அகற்றும் பணி, பொதுப்பணித்துறையினரால் துவக்கப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களைக்கொண்டு, புதர்களை அகற்றும் பணி நடக்கிறது.இதே போல், 'பாசன சபைகளின் பராமரிப்பிலுள்ள, பகிர்மான மண் கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி, கால்வாய்களை துார்வார வேண்டும்.கிளை கால்வாயில், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ஷட்டர்களை மாற்றியமைத்து நீர் விரயத்தை குறைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.