உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டி கோவில் தீர்த்தம் மாசுபடும் அபாயம்! தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு

பூண்டி கோவில் தீர்த்தம் மாசுபடும் அபாயம்! தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு

திருப்பூர்: 'திருமுருகன்பூண்டியில் உள்ள காளம்பாளையம் பாறைக்குழியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசடைந்து அருகேயுள்ள பழமையான திருமுருகன்பூண்டி கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறும் மாசுபடும் அபாயம் இருக்கிறது' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில், குப்பை கொட்டுவதற்கென பிரத்யேக இடமில்லாததால் கைவிடப்பட்ட, காலாவதியான பாறைக்குழிகளில், குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதன்படி, பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியிலும், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தது. இதற்கு எதிராக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், 'காளம்பாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவது, சட்ட விரோதம்; இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, நிலம், நீர், காற்று மாசுபடுகிறது' என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு எதிராக, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்ந்த பணிகள், அதற்கான ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு அந்த வழக்கில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது; திருப்பூர், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக்கழிவு கொட்டப்பட்டுள்ளதால், அங்குள்ள கழிவுநீரில் மாசு அளவு, 1.20 லட்சம் டிடிஎஸ் என மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினரின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது; இதனால், பல கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. இதுபோன்ற நிலை, காளம்பாளையம் பாறைக்குழி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புண்டு. காளம்பாளையம் பகுதியில் இருந்து, 950 மீ., தொலைவிற்குள் தான் பிரசித்த பெற்ற, புனிதம் மிக்க திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில் உள்ளது. திரளான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில், இங்குள்ள தீர்த்தம், புனிதம் நிறைந்ததாகவும், குறிப்பாக, மனநோய் தீர்க்கும் மருந்தாகவும், பக்தர்களால் நம்பப்படுகிறது.பொதுவாக, பாறைக்குழியில் குப்பைக்கழிவு கொட்டுவதால் நிலத்தடியில் உள்ள நீர் மாசுபடுவது, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும். அந்த வகையில், காளம்பாளையம் பாறைக்குழியை ஒட்டியுள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில் தீர்த்தக்கிணறும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அத்தகை நிலை வருவதற்குள், காளம்பாளையம் பாறைக்குழியில் தங்கியுள்ள கழிவுநீர் மற்றும் சுற்றியுள்ள நிலத்தடி நீரின் மாசு அளவை, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் கண்டறிய வேண்டும். பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இந்த கருத்தை முன்வைத்து தான், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ