உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்களுக்கான பெட்டிகளில் ரயில்வே போலீசார் சோதனை

பெண்களுக்கான பெட்டிகளில் ரயில்வே போலீசார் சோதனை

திருப்பூர் : ரயில்வே டி.ஜி.பி., உத்தரவையடுத்து, பெண் பயணிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகளில், பெண் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 'இது தொடர வேண்டும்' என்கின்றனர் பெண் பயணிகள்.கடந்த 6ம் தேதி கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜோலார்பேட்டை அருகே பெண்களுக்கான பிரத்யேக பெட்டியில் தனியாக இருந்த கர்ப்பிணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அம்பலமாக்கியது.இதை தொடர்ந்து, ரயில்வே டி.ஜி.பி., வன்னிய பெருமாள், ''ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் ரயில் வந்து நின்று புறப்படும் முன் பெண்களுக்கான பெட்டியில் பெண் போலீசார் ஏறி, பெண்கள் பாதுகாப்பாக உள்ளனரா, ஆண்கள் அப்பெட்டியில் பயணிக்கின்றனரா என்று விசாரிக்க வேண்டும்; பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மதியம் கோவையில் இருந்து திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த, எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண் பயணிகள் பிரத்யேக பெட்டியில் ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.பெண்கள் ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால், உடனடியாக ரயில்வே போலீசாரின் உதவி எண்களுக்கு 139, 1512 அழைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெண் ரயில் பயணிகள் கூறுகையில், 'ரயில்வே போலீசாரின் இந்த நடவடிக்கை தினசரி தொடர வேண்டும். ஒருநாள் இவ்வாறு சோதனை நடத்தி விட்டு, பின் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. உதவி எண்களை பெண்களுக்கான பிரத்யேக பெட்டிகளில் தெரியும் வகையில் எழுதலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ