ரயில் நிலைய புனரமைப்பு பணி; ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
திருப்பூர்; திருப்பூர் ரயில் நிலைய புனரமைப்பு கட்டுமானப்பணிகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.திருப்பூர் ரயில் நிலையம், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், 22 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக கட்டுமானப்பணி நடந்து வருகிறது. பணிகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், நேற்று பார்வையிட்டார்.அப்போது ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார். சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள், விளக்கமளித்தனர்.பொது மேலாளர் கூறுகையில், '' ரயில் நிலையம் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. பயணிகளுக்கு நடைமேடை, தங்கும் அறைகள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் மற்றும் முன்பதிவு மையங்கள் உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன; அடுத்த, 6 மாதத்தில் பணி நிறைவு பெறும்,'' என்றார்.