3.6 மீ., உயரத்தில் ரயில்வே சுரங்க பாலம்
திருப்பூர் : ஊத்துக்குளி -சென்னிமலை ரோட்டில், புதிய ரயில்வே சுரங்கபாலம் அமைக்கும் போது, 3.60 மீட்டர் உயரத்தில் அமைக்க வேண்டுமென, மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.ஊத்துக்குளியில் இருந்து, சிறுக்களஞ்சி வழியாக சென்னிமலை செல்ல, ரயில்வே சுரங்க பாலத்தை கடந்து சென்றுவர வேண்டும். குறைந்த உயரத்தில் பாலம் அமைந்துள்ளதால், கனரக வாகன போக்குவரத்து இவ்வழியாக தடைபட்டுள்ளது.கார் உள்ளிட்ட வாகனங்களும், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. இந்நிலையில், நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளதாக கூறி, ரயில்வே நிர்வாகிகள், பராமரிப்பு பணியை துவக்க திட்டமிட்டுள்ளனர். இதன்காரணமாக, நான்கு சக்கரவாகன போக்குவரத்து இங்கு தடை செய்யப்பட்டுள்ளது; டூ வீலர் மட்டும் சென்று வருகின்றன.சென்னிலை செல்லும் வாகனங்கள், பாலம் அடைக்கப்பட்டதால், ஐந்து கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முதல், பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில், கான்கிரீட் ரெடிமேடு பாலம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், புதிதாக அமைய உள்ள ரெடிமேடு பாலத்தை, உயரமாக அமைத்தால், டவுன் பஸ் உட்பட கனரக வாகனங்களும் சென்றுவர ஏதுவாக இருக்குமென, மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதுகுறித்து, மா.கம்யூ., ஊத்துக்குளி தாலுகா செயலாளர் சரஸ்வதி, எம்.பி., சுப்பராயனிடம் அளித்துள்ள கடிதம்: பழுதான பாலத்துக்கு மாற்றாக, கான்கிரீட் பெட்டி வடிவில் பாலம் அமைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது, மூன்று மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது அதற்காக அனுமதி பெறும் முயற்சி துவங்கியுள்ளது. பணிகள் நிறைவடைய, இரண்டு மாதங்களாகுமென தெரிவித்துள்ளனர். சென்னிமலை மற்றும் ஊத்துக்குளி பகுதி மக்களின் நலன்கருதி, புதிய பாலம் அமைக்கும் போது, 3.60 மீட்டர் உயரத்தில் பாலம் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும்; கனரக வாகனங்களும் சென்றுவர ஏதுவாக இருக்கும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.