ரேஷன் கடை அருகே சுகாதாரச் சீர்கேடு
திருப்பூர் : திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது அக்ரஹாரப்புத்துார். அங்குள்ள ரேஷன் கடையில், சின்னப்புத்துார், அக்ரஹாரப்புத்துார் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். ரேஷன் கடை அருகே, குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது.குப்பை நிரம்பியதும் டிராக்டர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன; கடந்த பல வாரங்களாக, குப்பை நிரம்பி வழிந்தாலும், உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. ரேஷன் கடையின் சுற்றுப் பகுதி குப்பைக்கிடங்கு போல் காட்சியளிக்கிறது.மிக அருகிலேயே, தண்ணீர் குழாயும் இருக்கிறது; தெருநாய் தொல்லையும் அதிகமாகிவிட்டது. கனரக வாகனங்கள் சென்று வரும் போதும், காற்று வீசும் போதும், பரவிக்கிடக்கும் பாலிதீன் கழிவுகள், அருகே வீடுகளுக்குள்ளும், ரேஷன் கடைக்குள்ளும் புகுந்துவிடுகிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. தனி அலுவலர் சிறப்பு கவனம் செலுத்தி, ரேஷன் கடை அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.