ரெயான் துணி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்
பல்லடம்: ரெயான் துணி விலை வீழ்ச்சியால், இன்று முதல் நவ., 3ம் தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, பல்லடம் பகுதி ஜவுளி தொழில் முனைவோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதன்படி, இன்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம் துவங்க உள்ளதாகவும், இந்தப் போராட்டத்தால், தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஜவுளி தொழில் முனைவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், 'வடமாநிலங்களை நம்பியே அதிகளவு விற்பனை நடந்து வரும் நிலையில், நுகர்வு குறைந்ததால், துணியின் விலை, 3 ரூபாய் வரை கொள்முதல் விலை குறைந்துள்ளது. ரெயான் துணி ரகங்களுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளோம். 15 நாட்கள் நடக்கும் உற்பத்தி நிறுத்தத்தால், ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இக்காலகட்டத்தில், தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நுால் உற்பத்தியாளர்கள் எங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார். விசைத்தறி இயக்கம் பாதிக்காது. ரெயான் துணி விலை வீழ்ச்சி காரணமாகவே, உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காடா துணிகளுக்கு இது பொருந்தாது என்பதால், விசைத்தறிகளின் இயக்கம் பாதிக்கப்படாது. மாறாக, ரெயான் துணி உற்பத்தி நடக்கும் சுல்ஜர், ஏர்ஜெட் உள்ளிட்டவைதான் பாதிக்கப்படும். - -சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஜவுளி தொழில் முனைவோர் சங்கம்.