உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3,000 கொடிக்கம்பம் அகற்றம்; கோர்ட் எச்சரிக்கையால் வேகம்

3,000 கொடிக்கம்பம் அகற்றம்; கோர்ட் எச்சரிக்கையால் வேகம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், பொது இடங்களில் உள்ள, 3,297 கொடிக்கம்பங்களில், இதுவரை மூவாயிரம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கம்பங்களை அகற்றும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள, அரசியல் கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கான, 12 மாத கால அவகாசம், கடந்த ஏப்., 21ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனாலும், திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில், பொது இடங்களில் உள்ள கொடிக்கங்களை அரசியல் கட்சியினர் அகற்றவில்லை.திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, 2,652 கொடிக்கம்பங்கள், பீடத்துடன் கூடிய 645 கம்பங்கள் என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டிய பட்டியலில் இடம்பெற்றன. இவற்றில், 2,859 அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள். கோர்ட் அளித்த அவகாசம் முடிந்தபோதும், திருப்பூர் மாவட்டத்தில், வெறும் 25 சதவீத கம்பங்களே அகற்றப்பட்டிருந்தன. கொடிக்கம்பங்களை அகற்றாதபட்சத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகவேண்டிவரும் என, கோர்ட் எச்சரித்தது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், கொடிக்கம்பங்கள் அகற்றும்பணிகளில், சில நாட்களாக, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு உள்பட அரசு துறையினர், வேகம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, வருவாய்த்துறையினரிடம் கேட்டதற்கு, 'திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டிய பட்டியலில் உள்ளன. கோர்ட் எச்சரிக்கையை அடுத்து, அந்தந்த துறைகள் வாயிலாக, கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்த கம்பங்களில் 91 சதவீதம், அதாவது, 3 ஆயிரம் கம்பங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கம்பங்களும் விரைவில் அகற்றப்படும். மின் கம்பிகளுக்கு அருகே உள்ள கம்பங்கள் போன்ற சிக்கலான இடங்களில் உள்ள கம்பங்களை, மின்வாரியம் உதவியோடு அகற்றப்படுகிறது. சுயமாக அகற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால், கம்பங்கள் அகற்றுவதற்கான செலவின தொகை, அந்தந்த கட்சியினர், அமைப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ