உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஆய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை

அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஆய்வு செய்ய அரசுக்கு கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், மேற்கு தொடர்ச்சிமலையில், 946 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. அணையில் துவங்கும், அமராவதி ஆறு, 148 கி.மீ., துாரம் பயணம் செய்து, கரூர் அருகே காவிரியுடன் இணைகிறது.அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணைக்கு அதிக நீர்வரத்து இருக்கும்.அப்போது அணை நிரம்பி, உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுவது வழக்கம். சில மாதங்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் சரிந்து ஆயக்கட்டு பகுதிகள் வறட்சியில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரை தடுப்பணைகள் கட்டி சேமித்தால், பல்வேறு பலன்கள் கிடைக்கும். ஏற்கனவே, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டிலுள்ள சில தடுப்பணைகளும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு மழை சீசனிலும், அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேமிக்கலாம்.இதனால், ஆண்டு முழுவதும் நெல் உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ளலாம். வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது.எனவே, தமிழக அரசு பொதுப்பணித்துறை வாயிலாக தொழில்நுட்ப குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி