தீவனப்புல் வளர்ப்புக்கு மானியம் கால்நடைத்துறைக்கு கோரிக்கை
உடுமலை; கால்நடைத்துறை சார்பில், தீவனப்புல் இடுபொருள், மழை நீர் தெளிப்பான் வினியோகித்தல் உட்பட மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்தி மற்றும் இதர தேவைகளுக்காக, 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாடு, எருமை, ஆடுகள் வளர்க்கப்படுகிறது. முன்பு, கால்நடைத்துறை சார்பில், பல்வேறு மானியத்திட்டங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை வளத்தை மேம்படுத்தவும் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான பயனாளிகள், கால்நடைத்துறையின், மருந்தகம், கிளை நிலையங்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்டனர். வழக்கமாக, பருவமழை துவங்கும் முன்பு, தீவனப்புல் வளர்ப்பிற்கான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும். தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தில், சோளம், அசோலா, ஊறுகாய்புல் சாகுபடிக்கும், தேவையான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. விளைநிலங்களில், மழை நீர் தெளிப்பான் அமைக்கவும், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியம் வினியோகித்தனர். வடகிழக்கு பருவமழைக்கு முன்பு, மானியத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.