உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பண்டிகைக்காக பொரி உற்பத்தி தீவிரம்: பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்

பண்டிகைக்காக பொரி உற்பத்தி தீவிரம்: பாரம்பரிய தொழிலை காக்க வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை பகுதிகளில், ஆயுதபூஜைக்காக, பொரி உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பாரம்பரியமான இத்தொழிலை காக்க, உரிய உதவிகள் வழங்க அரசு முன் வர வேண்டும், என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உடுமலை, ஏரிப்பாளையம், மடத்துக்குளம் தாலுகாகுமரலிங்கம், கொழுமம், பாப்பன்குளம் உட்பட பகுதிகளில் பாரம்பரியமான முறையில், பொரி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்காக, இப்பகுதிகளிலுள்ள உற்பத்தி நிலையங்களில் பொரி உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பொரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு ரக அரிசி, கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஒரு கிலோ, ரூ.55க்கு விற்ற நிலையில், தற்போது, ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. அரிசியை நீரில் ஊற வைத்து, சூரிய ஒளியில் உலர வைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது. பின்பு, அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, ஒரு சில மணி நேரம் வைத்திருந்து, வறுப்பதற்கு தயார் செய்யப்படும். அதற்கு பின், தயார் செய்த அரிசியை பொரி வறுக்கும் அடுப்புடன் கூடிய இயந்திரத்தில் கொட்டி, வறுக்கப்பட்டு பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பொரி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுமார், 55 படி கொண்ட ஒரு மூட்டை, ரூ.570க்கு விற்கப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் பயன்படுத்தி வந்த பொரி பயன்பாடு குறைந்த நிலையில், விற்பனை சரிந்து, இத்தொழிலில் இருந்த குடும்பங்கள் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். ஒரு சில குடும்பங்கள் மட்டும் பாரம்பரியமாக இத்தொழிலை செய்து வருகிறோம். விழாக்காலங்களில் மட்டும் விற்பனையாகிறது. நலிவடைந்து வரும் இத்தொழிலை காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை