உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் மகசூல் கடும் பாதிப்பு

நெல் மகசூல் கடும் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கரில், இரண்டாம் பருவம், சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குறுவைப் பருவமான, முதல் பருவ சாகுபடியின் போது, நோய்த்தாக்குதல், பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.இரண்டாம் பருவமான சம்பா பருவத்தில், வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நெல் சாகுபடி செய்த நிலையில், நடவு முதலே, வேர் அழுகல், தண்டுப்புழு தாக்குதல், குலை நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களால் நெற்பயிர்கள் பாதித்தன.வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பல்வேறு மருந்துகள் பரிந்துரை செய்தும் பயனில்லை. தற்போது, இப்பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மகசூல் பெருமளவு பாதித்துள்ளது.இதே போல், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திலும், சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்களும், பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, மகசூல் குறைந்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், இரு போகமும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், ஒரு போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பு பருவத்தில், நெற் பயிரில் பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும், கல்லாபுரம், குமரலிங்கம் உள்ளிட்ட பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குலை நோய், தண்டுப்புழு, வேர் அழுகல் என அடுத்தடுத்து, நோய் தாக்குதல் ஏற்பட்டு, அதற்கு மருந்துகள் அடித்தல், பராமரித்தல் என சாகுபடி செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நெல் சாகுபடிக்கு, ஏக் கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில், தற்போது மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. வழக்கமாக, ஏக்கருக்கு, 50 மூட்டை வரை மகசூல் இருக்கும் நிலையில், தற்போது, 15 முதல் 16 மூட்டை வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.நோய்த்தாக்குதல் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம், அரசுக்கு அனுப்பினர். தற்போது, மகசூல் பெருமளவு குறைந்து, நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், நெல் காய வைக்க உலர் களங்கள், இயந்திரங்கள் மற்றும் அரசு கொள்முதல் மையங்கள் திறக்கவும் வேண்டும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி