உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தங்க நகை பறிப்பு - வீடு புகுந்து கொள்ளை; அவிநாசியில், பீஹாரியா கேங் அதிரடி கைது

தங்க நகை பறிப்பு - வீடு புகுந்து கொள்ளை; அவிநாசியில், பீஹாரியா கேங் அதிரடி கைது

அவிநாசி : அவிநாசி வட்டாரத்தில், செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை என பல்வேறு திருட்டில் தொடர்புடைய பீஹார் மாநிலத்தை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.அவிநாசி ஒன்றியம், வடுகபாளையத்தை சேர்ந்தவர், சிவகாமி, 60. கடந்த, 19ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரிடம், டூவீலரில் வந்த இருவர் நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறினர். அதனை நம்பி, சிவகாமி தான் அணிந்திருந்த, 6 சவரன் தங்க செயினை கொடுத்தார். உடனே, குடிக்க தண்ணீர் கேட்டதால், அவர் உள்ளே சென்ற போது, நகையுடன், இரண்டு ஆசாமிகளும் ஓட்டம் பிடித்தனர்.இதற்கு முன், அவிநாசி வட்டாரத்தில் சில திருட்டு சம்பவங்களும் நடந்தன. இவ்வாறு திருட்டு, வழிப்பறி தொடர்ந்ததால், கொள்ளையர்களை பிடிக்க, டி.எஸ்.பி., சிவகுமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், எஸ்.ஐ., அமல் ஆரோக்கியதாஸ், ஏட்டு முகமது பாரூக், போலீசார் மயில்சாமி, பாலகுமாரன், குருசாமி, அஜீத்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமானது.

சிக்கிய கும்பல்

அதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் 25, புஜ்ஜி யாதவ் 45 ஆகிய இருவரும், சிவகாமியிடம் நகையை திருடி சென்றது உறுதியானதும், இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இருவரிடமும் போலீசார் 'விசாரணை' மேற்கொண்டதில் அஜய்குமார், 20, விஷால்குமார், 20, ரவீந்திரகுமார், 25, கிருஷ்ணகுமார், 27, ரஞ்சித்குமார், 26, சோனாகுமார், 22, சரவன்குமார், 20, ராகுல் குமார், 23 மற்றும் 17 வயதுடைய 5 சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் திருட்டு, கொள்ளை நடத்தவே, பீஹார் மாநிலத்திலிருந்து வந்துள்ளதும், இக்கும்பல் பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.உடனே போலீசார், பழங்கரை பைபாஸ் சாலை அருகே உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3 டூவீலர்கள், ஆறு பவுன் தங்க சங்கிலி மற்றும் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரையும் அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதில், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், ஐந்து சிறுவர்களை கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மற்றவர்களை அவிநாசியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை