உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.5 லட்சம் பரிசு காத்திருக்கு! நெல் விவசாயிகளே போட்டிக்கு தயாரா?

ரூ.5 லட்சம் பரிசு காத்திருக்கு! நெல் விவசாயிகளே போட்டிக்கு தயாரா?

திருப்பூர்; நெல் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் விருது வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் எம்.ஜி.ஆர்., விருதுகளை வேளாண் துறை வாயிலாக வழங்கி, தமிழக அரசு ஊக்குவிக்கிறது. திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து, மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுடன், சிறப்பு பரிசாக, 5 லட்சம் ரூபாய் மற்றும், 7,000 ரூபாய் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்குபெறும் விவசாயி, குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து, 3 ஆண்டுகள் திருத்திய நெல் சாகுபடியில் ஈடுபட்டு, முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே, பயிர் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க, உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவுக்கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ