திருப்பூர்: ஜி.எஸ்.டி. வரி வருவாய் மூலம், திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மதிப்பீட்டை கணக்கிட, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி, 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்குமென உத்தேச கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி) மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவினர், சுங்கவரித்துறையிடம் இருந்து, ஏற்றுமதி புள்ளி விவரங்களை பெற்று, அந்தந்த குறியீட்டு எண் அடிப்படையில், பின்னலாடை ஏற்றுமதி விவரத்தை துல்லியமாக கணக்கிட முடிகிறது. இருப்பினும், உள்நாட்டு விற்பனைக்கான ஆடை உற்பத்தியை கணக்கிட சரியான வழிமுறை இல்லை. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), உற்பத்தி மற்றும் வர்த்தக மதிப்பை துல்லியமாகவும், சட்டப்பூர்வமாகவும் கணக்கீடு செய்ய களமிறங்கியுள்ளது. ஜி.எஸ்.டி., புள்ளிவிவரங்களை பெற்று, சட்டப்பூர்வமாக, பின்னலாடை உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக கணக்கிடலாம் என முயற்சி எடுத்து வருகின்றனர். இது குறித்து, 'சைமா' தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''கோவை ஜி.எஸ்.டி. கமிஷனர் தினேஷ் பங்கர்கர், கடந்த வாரம், திருப்பூர் வந்திருந்தார். அவரிடம், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மதிப்பீடு கணக்கீட்டுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரும், இயன்ற உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். சங்க உறுப்பினர்களிடம் இருந்து, உற்பத்தியாகும் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளுக்கான, குறியீட்டு எண் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து விவரங்களும், ஜி.எஸ்.டி., கமிஷனர் வசம் ஒப்படைக்கப்பட்டு, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மற்றும் வர்த்தக மதிப்பீடு கணக்கீடு செய்யப்படும்,'' என்றார்.