புதிய கல்வியாண்டுக்கு தயாராகும் பள்ளிகள் துாய்மைப்பணிகள் தீவிரம்
உடுமலை, ; புதிய கல்வியாண்டுக்கு தயாராகும் வகையில், உடுமலை வட்டார அரசு பள்ளிகளில் துாய்மைப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.புதிய கல்வியாண்டு 2025-26 ஜூன் 2ம் தேதி முதல் துவங்குகிறது. முழு ஆண்டு விடுமுறையாக ஒரு மாத காலம் பள்ளிகள் மூடிய நிலையில் இருந்தன. பராமரிப்பு மற்றும் துாய்மைப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, வகுப்பறைகளை தயார் நிலையில் வைப்பதற்கு கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துாய்மைப்பணிகளை துவங்கியுள்ளனர்.மாணவர்களின் பெற்றோரும் பள்ளி துாய்மைப்பணிகள் மட்டுமில்லாமல், முழுமையான பாதுகாப்புடன் பள்ளி வளாகம் இருப்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் ஒரு மாதம் விடுமுறையாக இருந்ததால், குப்பைக்கழிவுகள் தேங்கியிருக்கும். அவற்றை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும்.மேலும், கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், பல பள்ளிகளில் மழைநீர் வளாகத்தில் தேங்கியுள்ளது. இன்னும் சில பள்ளிகளில் வகுப்பறைகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.தலைமையாசிரியர்கள் அவற்றை கண்காணித்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலாக பள்ளி வளாகத்தை பராமரிக்க வேண்டும். அதே போல் சிதிலமடைந்த கட்டடங்களை மழை காலத்தில் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.