உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் சீமைக்கருவேல் அகற்றும் பணி ஜரூர்

ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் சீமைக்கருவேல் அகற்றும் பணி ஜரூர்

திருப்பூர் : ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் நட்ட மரக்கன்றுகளுக்கு இடையே வளர்ந்துள்ள சீமைக்கருவேல் செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணை; திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. அணைக்கட்டில் தண்ணீர் தேக்க கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், பேபி வாய்க்கால் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.குளத்தில் உள்ள பெரும்பாலான இடம், சீமைகருவேல் மரங்கள் முளைத்து, காடுபோல் மாறியுள்ளது. இந்நிலையில், அணைக்கட்டுபகுதியில், பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, சோலையாக மாற்றும் முயற்சியை, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு கையில் எடுத்தது.காங்கயம் துளிகள் மற்றும் விவசாய அமைப்புகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், அணையின் தண்ணீர் தேங்காத பகுதிகளை சுத்தம் செய்து மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டது.கடந்த ஆண்டில், அணைக்கட்டில் மரம் வளர்க்கும் திட்டம் துவங்கியது. முதல்கட்டமாக, அணைக்கட்டு பகுதியில் உள்ள சீமைகருவேல் மரங்களை அகற்றி, 4,500 மரக்கன்றுகள் நடப்பட்டது; இரண்டாம் கட்டமாக, தங்கம்மன் கோவில் அருகே, அணைப்பகுதியில், 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இந்நிலையில், முதல்கட்டமாக மரக்கன்று நட்டு வைத்த இடங்களில், மீண்டும் சீமைகரு வேல் செடிகள் அதிகம் முளைத்துள்ளன. அதன்காரணமாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு மற்றும் காங்கயம் துளிகள் அமைப்பினரின் முயற்சியால், அவற்றை அகற்றும் பணி துவங்கியுள்ளது.'பொக்லைன்' மூலம், மரக்கன்றுகளுக்கு இடையே முளைத்துள்ள, சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடந்து வருவதாக, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை