உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர் : தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் ஜரூர் : தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

உடுமலை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சியினரோ, வாக்காளரோ பயப்பட தேவையில்லை' என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட பி.எல்.ஓ.,க்கள், வீடு தேடிச்சென்று வழங்கிவருகின்றனர். Voter Helpline என்கிற மொபைல் செயலியில், Know Your Ero, Blo என்பதை தேர்வு செய்து, வாக்காளர் அட்டை எண்ணை கொடுத்தாலே போதும், பி.எல்.ஓ., வின் பெயர் மற்றும் தொடர்பு எண் கிடைக்கும். அனைத்து பி.எல்.ஓ.,க்களையும் கட்டாயம் வீடு தேடிச்சென்று, வாக்காளரிடம் படிவங்கள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சில இடங்களில், பி.எல்.ஓ., வருகையை பார்த்து, ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கூடி, தங்கள் படிவங்களை கேட்டுப்பெறுகின்றனர். வாக்காளர்களை பொறுத்தவரை, எப்படியோ தங்களுக்கான படிவம் கைக்கு கிடைத்தால்போதும் என்கிற மனநிலையிலேயே உள்ளனர்; பி.எல்.ஓ.,க்களை பார்த்தாலே, படிவம் கேட்டு வாங்கிச்சென்றுவிடுகின்றனர். ஒவ்வொரு பி.எல்.ஓ.,வும் எத்தனை படிவங்கள் வழங்கியுள்ளனர்; இன்னும் எத்தனை படிவங்கள் வழங்கவேண்டியுள்ளது என்கிற விபரங்களை உன்னிப்பாக கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். குறைந்த எண்ணிக்கையில் படிவம் வழங்கிய பி.எல்.ஓ.,க்களை கண்டறிந்து, பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பத்து பி.எல்.ஓ.,க்களுக்கு ஒருவர் வீதம் பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்கள்; 5 மேற்பார்வையாளருக்கு ஒருவர் வீதம், தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, படிவம் வழங்கல் பணிகள், நுண்மட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. படிவங்களை சேகரிப்பதற்காக பி.எல்.ஓ.,க்கள் வரும்போது, வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அரசு அலுவலர்களும் உடன் வருவர். இதற்காக, ஒவ்வொரு ஊராட்சிகளின் செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது; கூடுதலாக அரசு அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இவர்கள், வாக்காளர்களுக்கு படிவம் பூர்த்தி செய்யவும், 2002 வாக்காளர் பட்டியல் விபரங்களை பெறுவதற்கு உதவுவர். தீவிர திருத்த பணிகளில், படிப்படியாக அனைத்து அரசுத்துறையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் எவ்வித குழப்பமோ, பயப்பட தேவையில்லை. தீவிர திருத்தம் சிறப்பாக நடைபெறும்; செம்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும். இவ்வாறு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி