பெண்களுக்கு பாலியல் தொல்லை; குழு அமைக்க கலெக்டர் அட்வைஸ்
திருப்பூர்; பணியிடங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில், உள்ளக புகார் குழுக்கள் அமைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும், அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில், உள்ளக புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். ஒரு சில அலுவலகங்கள் மட்டும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில், புகார் குழு அமைக்கப்பட்ட அறிக்கையோ, புகார் பெறப்பட்ட விவரமோ கிடைப்பதில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன்படி பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலங்களில் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். குழு அமைக்கப்பட்ட அறிக்கையை, கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பதுடன், www.tnswd--poshicc.tn.gov.inஎன்ற இணையதளத்திலும், உள்ளக புகார் குழு மற்றும் மாதாந்திர அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உள்ளக புகார் குழு அமைக்கப்படாத பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பணியிட நிறுவனங்கள் மீது, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.