மாற்றுத்திறனாளிக்கு வசதிகள் மேயரிடம் சக்ஷம் வலியுறுத்தல்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில், மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என, சக் ஷம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.சக் ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, மேயருக்கு இதுதொடர்பாக அளித்துள்ள மனு:மாநகராட்சியின் அனைத்து அலுவலக கட்டடங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக, தாழ்தளம், கழிப்பிடம், இருக்கை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.திருமண மண்டபம், சமுதாயக்கூடம் போன்ற பொது பயன்பாட்டு கட்டடங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே, கட்டட அனுமதி வழங்கப்பட வேண்டும்.கட்டுமானம் முழுமை பெறும் நிலையில் உள்ள, மாநகராட்சியின் தினசரி மார்க்கெட், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்களில், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அரசு கட்டடங்களை ஒதுக்கும் போது, மானியத்துடன் வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சமுதாயநலக்கூடங்களில், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள, குறைந்த கட்டணத்தில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.