தள்ளாடும் பிரதான கால்வாய் பாலம்: போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
உடுமலை: காட்டம்பட்டி செல்லும் பிரதான வழித்தடத்தில், கால்வாய் பாலம் வலுவிழந்து தடுப்பு சுவரும் இடிந்துள்ளதால், உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது. குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு ஊராட்சி அரசூர் வழியாக செல்லும் ரோடு, காட்டம்பட்டி சென்று அங்கிருந்து, பொள்ளாச்சி - பல்லடம் மாநில நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இந்த ரோட்டில், அரசூர் அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. அங்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிலுள்ள பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து வருகிறது. ஓடுதளத்தில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இருபுறங்களிலும், தடுப்பு சுவர் இடிந்து வருகிறது. இந்த ரோட்டின் வழியாக பல கிராம மக்களின் வாகனங்கள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைக்கான கனரக வாகனங்கள், தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. எனவே பிரதான கால்வாய் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கிராம மக்கள் கூறுகையில், 'காட்டம்பட்டி செல்லும் ரோடு அதிக போக்குவரத்து உடையதாகும். பிரதான கால்வாயிலுள்ள பாலம் பழுதடைய துவங்கிய போதே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்பினோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை புதுப்பித்து, ரோட்டின் அகலத்துக்கு ஏற்ப விரிவாக்க செய்ய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.