உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலிபாளையம் பாறைக்குழியில் அதிர்ச்சியூட்டும் மாசு அளவு

முதலிபாளையம் பாறைக்குழியில் அதிர்ச்சியூட்டும் மாசு அளவு

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அங்கு குப்பைக் கொட்ட தடை விதிக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், விவசாயிகள், தன்னார்வலர்களை உள்ளடக்கிய திருப்பூர் சுற்றுச்சூழல் குழுவினர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அங்கு குப்பை கொட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தை சேர்ந்த அலுவலர்கள் குழு, கடந்த மாதம், பாறைக்குழி பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அங்குள்ள நீர், மண் ஆகியவற்றை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்; அதன் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. இதில், நீரில் கலந்துள்ள மொத்த திடப் பொருட்கள் (டி.டி.எஸ்.) அளவு, ஒரு லிட்டரில், 1.20 லட்சம் மி.கி., என்ற அளவில் கலந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவை சேர்ந்த வேலுசாமி கூறியதாவது: முதலிபாளையம் பாறைக்குழியில், கடந்த, 10 ஆண்டாக, மாநகராட்சி நிர்வாகம் குப்பைக்கழிவு கொட்டி வருகிறது. தினசரி, 573 டன் குப்பைக் கொட்டப்படுவதாக கூறப்படும் நிலையில், தோராயமாக, கடந்த, 10 ஆண்டுகளில், 20 லட்சம் டன்னுக்கு மேல் குப்பை கொட்டப்பட்டுள்ளது. குவிந்துக்கிடக்கும் குப்பையில் இருந்து வெளியேறும், கழிவுநீரில் டி.டி.எஸ் அளவு மிக அதிகம்.அந்த நீரை சுத்திகரிப்பு செய்யவே முடியாது என்கின்றனர்.நீரில் கலந்துள்ள நீரில், டி.டி.எஸ். அளவு, ஆயிரத்தை கடந்தாலே, அத்தகைய நீரை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் கூறுகின்றனர். இதில் இருந்து எந்தளவு மாசு உருவாகியிருக்கிறது என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார். முதலிபாளையம் பகுதியில், 15 ஏக்கர் நிலத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே குப்பை கொட்டப்பட்ட அம்மாபாளையம், நெருப்பெரிச்சல், காளம்பாளையம் உள்ளிட்ட பிற இடங்களிலும், நீரின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லை மட்டுமின்றி, மாவட்டம் முழுக்க தாலுகா, வட்டாரம் வாரியாக நிலத்தடி நீரின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்துவதன் வாயிலாக, மக்களுக்கு தெளிவு கிடைக்கும். தவறினால், மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும். - வேலுசாமி, முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ