ஆண்டுதோறும் டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர் சையத் முகமது புஹாரி நம்முடன் பகிர்ந்தவை:எய்ட்ஸ் என்பது நோயல்ல, நோயெதிர்ப்பு மண்டலம் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் ஒரு நிலை. எச்.ஐ.வி. என்னும் வைரஸ் கிருமி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி, நம் பாதுகாப்பு சக்தியாக விளங்கும் 'சி.டி.4' (CD4) செல்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைக்கிறது. இந்த செல்கள் குறைந்தால், சிறிய நோயாலும் கடும் பாதிப்பு வரும். எச்.ஐ.வி. பாதித்து, அறிகுறி தெரியவே 3 மாதம் முதல் ஒரு ஆண்டு வரையாகும். எதிர்ப்பு சக்தி குறையும் சளி, காய்ச்சல் போன்ற நோய்க்கு எந்தவகை மருந்து எடுத்தாலும், அவை உடலில் உள்ள கிருமியை அழித்து, அவற்றின் அளவைக்குறைக்கும். நம் நோயெதிர்ப்பு சக்தியால் மட்டுமே நாம் குணமடைவோம். கொரோனா காலத்தில் கூட நம் எதிர்ப்பாற்றலால் தான் வெற்றி கிடைத்தது. ஆனால் அந்த நோய் எதிர்ப்பு சக்தியை எச்.ஐ.வி. கிருமி அழித்து விடுகிறது. ஏ.ஆர்.டி மருந்து ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி என்னும் ஏ.ஆர்.டி. மருந்து அதிக பலனளிக்கக்கூடியது. வைரஸ் பெருகும் வேகத்தை குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்தி, பிறருக்கு பரவும் அபாயத்தை குறைத்து, நோயாளி ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாக வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மருந்து வாங்கி பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். நமக்கு வரும் நோய், நம்மை சார்ந்தோரையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து, தயக்கமின்றி மருந்து எடுக்க வேண்டும். தவறாக பார்க்காதீர்கள் எய்ட்ஸ், முற்றிலும் குணப்படுத்த முடியாது; கட்டுக்குள் வைக்கலாம். இன்று ஏராளமான மருந்துகள் வளர்ந்து விட்டன. இந்நோய் இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவு மருந்தின் மூலம் மக்கள் இயல்பாக வாழத்தொடங்கினர். எய்ட்ஸ் உடன் வாழ்பவர்கள் உடல், மனம், உணர்ச்சி ரீதியாக பல சவால்களை எதிர்கொள்கின்றனர். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவர்களுக்கு பாகுபாடின்றி ஆதரவு கொடுத்து, அன்பு காட்டுவது நம் கடமை. - இன்று(டிச. 1) உலக எய்ட்ஸ் தினம். எதனால் பரவும்? பாதிக்கப்பட்டவரின் ரத்தம், தாய்ப்பால், பாலியல் திரவம் போன்ற உடல் திரவங்கள் பரிமாறும்போது, பிறருக்கு இந்நோய் வரும். மருத்துவமனை, மருத்துவ முகாம், சலுான், டாட்டூ கடை போன்ற இடங்களில் முறையாக கிருமிநீக்கம் செய்யப்படாமல் ஒரே பிளேட், கத்தி, அல்லது ஊசி பயன்படுத்தல் என பல காரணிகள் இருக்கின்றன. இப்படி, பாதிக்கப்பட்டவரின் உடல் திரவம், பிறர் உடலில் படும்படியான செயல்களால் இந்நோய் பரவும். கண், புண்களில் அது பட்டாலும் வரும். காற்று, தண்ணீர், வியர்வை, எச்சில், கைகுலுக்கல், தொடுதல், தும்மல், அணைப்பு, ஒரே பாத்திரத்தில் உணவு, தண்ணீர் உட்கொள்வது, பொது கழிப்பிடம் பயன்படுத்துதல், கொசுக்கடி போன்றவற்றால் இது பரவாது. ஆரம்ப நிலையில் கண்டறிவது பாதிப்பை குறைக்கும். எலிசா, ராபிட், பி.சி.ஆர். போன்ற பரிசோதனைகளில் கண்டறியலாம். பாதுகாப்பான உடலுறவு, முறையாக கிருமிநீக்கிய ஊசி, கத்தி, பிளேட் பயன்பாடு, கர்ப்ப காலத்தில் நோய் உள்ளதா என உறுதிசெய்து கொள்ளுதல், மக்களிடம் விழிப்புணர்வு, ஒருவனுக்கு ஒருத்தி, போன்ற வாழ்க்கைமுறை ஆகியவை நோய் தடுப்புக்கு வழிவகுக்கும். - சையது முகமது புஹாரி, அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர்.