மேலும் செய்திகள்
கலாமுக்கு பசுமை அஞ்சலி
28-Jul-2025
கிராம ஊராட்சிகளில், பசுமை போர்வையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், ஊக்குவிக்கப்பட்ட மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டத்தில் திடீர் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியத்தில், 31 கிராம ஊராட்சிகள் உள்ளன. நகர்ப்புற ஊராட்சிகளை தவிர்த்து, கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகள், இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் தான் உள்ளன. கிராம ஊராட்சிகளில் பசுமைப் போர்வையை அதிகப்படுத்தும் நோக்கில், மரக்கன்று நட்டு வளர்க்க, அரசின் சார்பில் ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. நான்காண்டுகள் முன், நடுவச்சேரி ஊராட்சியில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உருவாக்கப்படும் மரக்கன்றுகளை, அருகேயுள்ள ஊராட்சி நிர்வாகத்தினர் வாங்கிச் சென்று, தங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட வாய்ப்புள்ள இடங்களில் நட்டு வளர்த்து, பராமரிக்க வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில், இப்பணி சீராக நடந்து வந்தது. கடந்த நான்காண்டில், 60 ஆயிரம் மரக்கன்றுகள் பிற ஊராட்சிகளுக்கு வினியோகிக்கப்பட்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் அவ்வப்போது ஆய்வு செய்து, பணியை கண்காணித்து, ஊக்குவித்து வந்தார்.தற்போது, கிராம ஊராட்சிகளில் மரக்கன்று நட்டு வளர்ப்பதில், தொய்வு தென்படுகிறது. இதனால், நடுவச்சேரி நாற்றுப்பண்ணையில், 40 ஆயிரம் மரக்கன்றுகள் தேங்கியுள்ளன. சமீபத்தில், நடுவச்சேரி நாற்றுப்பண்ணையை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே, நர்சரி செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்தார்.அதே நேரம், 'பிற ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் திட்டத்தை ஊக்குவிக்கவும் உரிய அறிவுரையை அவர் வழங்க வேண்டும்' என்கின்றனர், சுற்றுச்சூழல் நல விரும்பிகள். --- நடுவச்சேரி ஊராட்சியில் நாற்றுப்பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. மண்ணுக்கேற்ற மரங்கள் நடுவச்சேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையில் மண்ணுக்கேற்ற மரங்களான புளிய மரம், நாவல், முள் சீத்தா, விலாம்பழம், அயல்வாகை, வேம்பு, இலுப்பை, ஆத்தி, பூவரசன் உட்பட மற்றும் பல வகை மரக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன.
28-Jul-2025