பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழா
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சூரசம்ஹார விழா வரும், 22ல் துவங்கி, 28 வரை நடக்கிறது. உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சூரசம்ஹாரவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோவிலில், தனி சன்னதியில் முருகப்பெருமான் எழுந்தருளி வருகிறார். நடப்பாண்டில் இக்கோவிலில், முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் கந்த சஷ்டி விழா வரும், 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 6:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், யாக சாலை பூஜைகளுடன் துவங்கி, தினமும், யாக சாலை பூஜைகள், சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. கந்த சஷ்டி விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, 6ம் நாள், மதியம், 3:15 மணிக்கு, வேல்வாங்கும் உற்சவமும், 4:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு, சூரசம்ஹாரம், மாலை, 6:30 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. 28ம் தேதி, காலை, 10:30 முதல் 12:30 வரை, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இவ்விழாவில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.